March 28, 2023
Chicago 12, Melborne City, USA
Entertainment News

இலங்கையில் மீண்டும் கிளர்ச்சி வெடிக்கும்: அமெரிக்கா எச்சரிக்கை

கொழும்பு: போர்க்குற்றங்கள், அதற்குப் பொறுப்பேற்றல் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலும், இலங்கை அரசும் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சோகமான பழைய நிகழ்வுகள் மீண்டும் நடக்கக்கூடும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அமெரிக்க வெளியுறவுத் துணை அமைச்சர் ராபர்ட் பிளேக்கும் எச்சரித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:

போருக்குப் பிந்தைய அமைதி, நல்லிணக்கம் ஏற்படுத்தும் வாய்ப்புகள் தவறவிடப்பட்டுவரும் நிலையில், இலங்கையில் மீண்டும் பழைய சோகங்கள் திரும்பாதபடி ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் உறுப்பினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்டனையில் இருந்து தப்பிக்கும் போக்கிலிருந்து மாறி, குற்றங்களுக்குப் பொறுப்பேற்கும் வகையிலான நீதியும் உண்மையும் வலியுறுத்தப்பட வேண்டும்.

2009-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பிறகு தமிழர்களிடம் நல்லிணக்கம் ஏற்படுத்தும் அரசியல், பொருளாதார, கலாசார ரீதியிலான எந்த நடவடிக்கையையும் இலங்கை அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் 32 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார்கள் அல்லது காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களில் 10 பேரின் உடல்கள் கொலை செய்யப்பட்டதற்கான தழும்புகளுடன் கிடைத்திருக்கின்றன.

வடக்குப் பகுதியில் வசிக்கும் தமிழ்ப் பெண்களை துணை ராணுவக் குழுக்கள் தங்களது பாலியல் விருப்பங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களைப் பலவந்தப்படுத்தி வடக்கில் முகாமிட்டிருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். இனப் பரவலைச் சீர்குலைக்கும் நோக்கில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் சிங்களக் குடியிருப்புகளை அரசு ஏற்படுத்தி வருகிறது; ராணுவத் தளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அரசு அதிகார வர்க்கத்தில் இருந்து தமிழர்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புறக்கணிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்று சம்பந்தன் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச்செயலர் பிளேக் கூறியுள்ளதாவது:

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பேற்றலுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படாவிட்டால் மீண்டும் கிளர்ச்சி ஏற்படும் என்பது பல நாடுகளில் நடந்த இனப் பிரச்னைகளில் இருந்து நாம் கற்றுக் கொண்டிருக்கிறோம். இது இலங்கையிலும் நிகழும் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *