இலங்கை செல்லும் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுக்கு ஏன் இடம் தரவில்லை என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சாலிடம் கேட்டால் அவர் வினோதமான விளக்கத்தை அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளின் பிரதிநிதித்துவ அடிப்படையில்தான் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் பன்சால். ஆனால் கடந்த முறை மட்டும் எப்படி திருமாவளவனை சேர்க்க முடிந்தது என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை. மேலும், கடந்த முறை அதிமுகவை ஏன் சேர்க்கவில்லை, திமுக கூட்டணிக் கட்சிகளை மட்டுமே ஏன் இலங்கைக்குக் கூட்டிச் சென்றனர் என்பது குறித்தும் கூறவில்லை. மேலும், காங்கிரஸ் கட்சியிலிருந்து மட்டும் அதிகம் பேர் இடம் பெற்றிருப்பது ஏன் என்பதையும் அவர் விளக்கவில்லை.
திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மட்டும் அடங்கிய எம்.பிக்கள் குழு இலங்கை சென்று சுற்றிப் பார்த்து விட்டு வந்தது. அந்தக் குழு போன பின்னரும் கூட எந்தவிதமான முன்னேற்றத்தையும் ராஜபக்சே அரசு காட்டவில்லை.
அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த திருமாவளவனிடம், நல்லவேளை நீங்க பிரபாகரனுடன் இல்லை, இருந்தால் செத்துப் போயிருப்பீங்க என்று அநாகரீகமாகப் பேசியதுதான் மிச்சம்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு எம்.பிக்கள் குழு 16ம் தேதி இலங்கை செல்கிறது. இந்தக் குழுவுக்கு சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்குகிறார். 15 பேர் அடங்கிய இக்குழுவில் பாஜக சார்பில் சுஷ்மா உள்பட 3 பேரும், காங்கிரஸ் சார்பில் ஐந்து பேரும் – இவர்களில் எம். கிருஷ்ணசாமி, மாணிக்க தாகூர், என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், சிபிஎம் சார்பில் டி.கே.ரங்கராஜன், திரினமூல் காங்கிரஸ் சார்பில் ஒருவர், அதிமுக சார்பில் ரபி பெர்னார்ட், திமுக சார்பில் டிகேஎஸ் இளங்கோவன், ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாடி, பிஜூ ஜனதாதளம் ஆகியவை சார்பில் தலா ஒருவர் என இடம் பெறுகின்றனர்.
ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திருமாவளவனையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் மத்திய அரசு இக்குழுவில் சேர்க்கவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் பன்சாலிடம் இக்கட்சிகள் கோரிக்கை விடுத்தும் கூட அவர் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில், பாரபட்சம் காட்டப்படுவது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளின் உறுப்பினர் பலத்தின் அடிப்படையில்தான் இலங்கைக்குச் செல்லும் நாடாளுமன்றக் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
எல்லோரையும் குழுவில் சேர்ப்பது இயலாத காரியம். அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்கள் பட்டியலில் இடம்பெறாமல் இருந்திருக்கலாம். இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவின் பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டு விட்டதா என்பது எனக்குத் தெரியாது என்று பதிலளித்துள்ளார்.
அப்படியானால் இதேபோல எம்.பிக்கள் குழுவை அனுப்பியபோதும் இதேபோலத்தான் பிரதிநிதித்துவம் பார்த்தார்களா என்பதை அவர் விளக்கவில்லை.