March 23, 2023
Chicago 12, Melborne City, USA
Entertainment News

குங்குமப்பூ மலரும் அதன் மருத்துவ குணங்களும்..

பூக்கள் வாசனைக்காகவும், பூஜைக்காகவும் மட்டுமே உகந்தது என்று பலர் நினைக்கின்றனர். அது தவறான எண்ணம். இந்தப் பூக்களில் மருத்துவமும் நிறைந்துள்ளது.

இத்தகைய மருத்துவத் தன்மை கொண்ட பூக்களை நுகரும்போது உடலுக்கு நன்மையளிக்கிறது. இதனால்தான் நம் முன்னோர்கள் நறுமணம் மிக்க மலர்களை பூஜைக்கு பயன்படுத்தினர்.

மலர்களைப் பயன்படுத்தி நோய்களை நீக்கும் முறைதான் மலர் மருத்துவம். இந்த மலர் மருத்துவம் தற்போது பிரசித்திப் பெற்றாலும், ஆதி காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மலர்களில் குங்குமப் பூவும் ஒன்று.
குங்குமப்பூவைப் பற்றி அறியாத பெண்கள் இருக்க மாட்டார்கள். கருவுற்ற தாய்க்கு குங்குமப் பூ கொடுத்து வந்தால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்று குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுப்பார்கள். குழந்தை சிகப்பாகப் பிறக்கிறதோ இல்லையோ, ஆனால் ஆரோக்கியமான சுகப்பிரசவமாக குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை.

குங்குமப் பூ இணூணிதண் இனத்தைச் சேர்ந்தது. இதன் பூக்களில் உள்ள இதழ்களும் மகரந்தமுமே மருத்துவத் தன்மை கொண்டவை. இதனை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் செம்மஞ்சள் நிறமாக மாறும். இது மேற்காசிய நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்திலும் பயிராகிறது.

இதற்கு ஞாழல் பூ, காஸ்மீரகம் என்ற பெயர்களும் உண்டு.

Tamil – Kungumapoo
English – Saffron
Sanskrit – Kumkuma
Malayalam – Kugamapoo
Telugu – Kumkumapoova
Hindi – Kesar
குங்குமப்பூ வைக்கண்டால் கூறுகொண்டை பீனசநோய்

தங்குசெவித் தோடஞ் சலதோடம்-பொங்கு
மதுரதோ டந்தொலையும் மாதர் கருப்ப
உதிரதோ டங்களறும் ஒது
– அகத்தியர் குணவாகடம்

பொருள் – நீர் வேட்கை, மேகநீர், தலைவலி, கண்ணில் விழுகின்ற பூ, கண்ணோய், வாந்தி, மூக்கில் நீர் வடிதல், நீரேற்றம், கருப்பை அழுக்கு போன்றவற்றைப் போக்கும்.

மருத்துவப் பயன்கள்
காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து கருவுற்ற மூன்றாம் மாதத்திலிருந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுத்து வந்தால் குழந்தை ஆரோக்கியமாக வளரும். தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். சுகப்பிரசவம் ஆக அதிக வாய்ப்புண்டு.

கர்ப்பிணிகளுக்கு இரத்தத்தில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி அதிகளவு இரும்புச்சத்தை உட்கிரகிக்கச் செய்து உடலுக்கு பலம் கொடுக்கும். சிசுவிற்கு சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாதவாறு காக்கும்.

ஆண், பெண் இருபாலரும் குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்தலாம். ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். பெண்களுக்கு கருப்பையில் உள்ள தேவையற்ற அழுக்குகளைப் போக்கி கருப்பையை வலுவாக்கும். மாதவிலக்கு சுழற்சியை சீராக்கும்.

கண் பார்வையை தெளிவாக்கும். 40 வயதைத் தாண்டியவர்களுக்கு உண்டாகும் வெள்ளெழுத்தைப் போக்கும். கண்களில் பூ, புரை போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

தலையில் நீரேற்றம், தலைவலி, மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கும். நுரையீரல் சளியை நீக்கும்.

அஜீரணத்தைப் போக்கி நன்கு பசி உண்டாக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *