இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தேசிய பிரச்சனையாக மத்திய அரசு கருதவில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
மன்மோகனுக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தொடரும் தாக்குதல்
பாக்ஜலசந்தி பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் (ராமேசுவரம் மீனவர்கள்) மீது கடந்த 14-ந்தேதி இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது அவர்களின் படகு மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டு மீனவர்கள் 4 பேர் கடலில் மூழ்கி விட்டனர். அவர்களை மற்றொரு படகில் வந்தவர்கள் மீட்டு மறுநாள் (15-ந்தேதி) காலை கரைக்கு கொண்டு வந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காது என இலங்கை அரசு உறுதி அளித்த பிறகும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இலங்கை இரட்டை வேடம்
பலமுறை இந்த தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கடற்படை மற்றும் மீனவர்கள் மீது இதுவரை எந்த புகாரும் பதிவு செய்யப்படவில்லை. தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது தெரிந்தும் இலங்கை அரசு அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் இலங்கை கடற்படையும், அந்நாட்டு சமூக விரோதிகளும் தமிழக மீனவர்கள் மீது துணிச்சலாக தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசு இரட்டை வேடம் போடுவது இதில் இருந்து தெரிய வருகிறது.
தேசிய பிரச்சனையாக கருதவில்லை
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தை இந்திய அரசு தேசிய பிரச்சினையாக கருதவில்லை என்பதை மிகவும் வேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன். மேலும் இதன் மீது எந்தவித கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கடந்த ஜனவரி1 3, 14-ந்தேதிகளில் கொழும்பில் நடந்த கூட்டு குழு கூட்டத்தில் இரு நாட்டு மீனவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் தொடர் தாக்குதலால் அது பயனாற்று போய்விட்டது.
பாக்ஜலசந்தி மீன்பிடி உரிமை
எனவே பாரம்பரியமாக பாக்ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான உரிமைகளை திரும்ப பெற வேண்டும். இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தும்படி அந்நாட்டு அரசையும், அதிபரையும் வலியுறுத்த வேண்டும் என்று ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.