காஜலின் தங்கை நிஷாவும் தமிழுக்கு வருகிறார்!
அம்பிகா – ராதா, ராதிகா – நிரோஷா, பானுப்ரியா – நிஷாந்தி, நக்மா – ஜோதிகா போன்ற சகோதரி நாயகிகளின் வரிசையில் நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலும் தமிழ் சினிமா ஒன்றில் கமிட் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு சினிமாவின் அழகு தேவதையான காஜல், அவ்வப்போது தமிழ் சினிமாவுக்கும், தமிழ் ரசிகர்களுக்கு தரிசனம் காட்டிவிட்டுச் செல்வார். கண்ணழகி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் காஜலுக்கு அழகான தங்கை ஒருவர் இருக்கிறார் என்பதையறிந்த பிரபல தமிழ் சினிமா அதிபர்கள் சிலர் தங்கைக்கு வலைவிரித்தனர். நிஷா என்ற பெயரைக் கொண்ட அந்த அழகு தேவதை தமிழ்சினிமாவில் நடிக்க மறுத்ததுடன், தெலுங்கு படங்களில் கமிட் ஆகி ஆந்திரவாலாக்களுக்கு முன்னுரிமை கொடுக்க ஆரம்பித்து விட்டார்,
தெலுங்கில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆன “ஏமய்ந்தி ஈ வேள படத்தின் மூலம் அறிமுகமான நிஷா அகர்வாலுக்கு தெலுங்குப் படவுலகம் பட்டுக்கம்பளம் விரிக்கத் தொடங்கியதால் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். தற்போது தெலுங்கின் இளம் ஹீரோ நர ரோஹித் நாயுடுவுடன் நிஷா நடித்து வரும் “சோலோ படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பல முன்னணி ஹீரோக்களும் நிஷா அகர்வால் என்றால் ஓ.கே. என்று கூறி வாய்ப்புகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கையில், “ஏமய்ந்தி ஈ வேள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒத்துக்கொண்டிருக்கிறாராம் நிஷா அகர்வால்.
தமிழில் களவாணி விமல் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தினை உன்னைப் போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டொலேட்டியிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரேம் நசீர் இயக்கவுள்ளார். பாலாஜி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.