மம்மூட்டி ஜோடியாகிறார் நயன்தாரா
மலையாள நடிகர் மம்மூட்டியின் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் நடிகை நயன்தாரா.
வைக்கம் முகமது பஷீரின் சிறந்த கதைகளில் ஒன்று மதிலுகள். இவரின் கதைகளின் ஹீரோ கேரக்டர் பெரும்பாலும் பஷீர் என்றே அமைந்திருக்கும். சுதந்திரப் போராட்ட காலங்களில் அரசுக்கு எதிராக எழுதியதாக பஷீர் சிறையில் அடைக்கப்பட்ட அனுபவம்தான் இந்தக் கதை. இந்தக் கதையைத்தான் மதிலுகள் என்ற பெயரிலே அடூர் பாலகிருஷ்ணன் படமாக இயக்கியிருந்தார். பெண் கதாபாத்திரங்களே இல்லாத இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் மம்முட்டிக்கு தேசிய விருது கிடைத்தது. இதன் இரண்டாம் பாகம் மதிலுகளுக்கப்புறம் என்ற பெயரில் உருவாகிறது.
ஆண்கள் சிறையில் இருக்கும் பஷீருக்கு பெண்கள் சிறையில் இருக்கும் நாராயணியுடன் நட்பு உருவாகிறது. இரண்டு சிறைகளுக்கும் இடையில் பெரிய மதில் சுவர் இருப்பதால் ஒருவரையொருவர் சந்தித்துப் பேச முடியாது. இதனால் பஷீரால், நாராயணியை பார்க்க முடியாது. குரலை மட்டும்தான் கேட்க முடியும். மற்ற அரசியல் கைதிகளின் விடுதலைக்குப் பின் தனிமையில் இருக்கும் பஷீருக்கு நாராயணியின் குரல் ஆறுதலாக இருக்கும். சிறையில் இருந்து விடுதலை பெற்ற பின்னும்கூட நாராயணியை பார்க்காமலேயே சென்று விடுவார் பஷீர்.
பஷீராக மம்முட்டியும், நாராயணியாக நயன்தாராவும் நடிக்கின்றனர். மம்முட்டியின் சொந்தப் பட நிறுவனம் தயாரிக்கிறது. புதுமுக இயக்குநர் பிரசாத் இயக்குகிறார். படம் 3 மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.<a
Leave feedback about this